[
Rajini : ரஜினி ஹிட் லிஸ்டில் பார்க்கும்போது தில்லு முல்லு படமும் இடம்பெறும். ஆனால் அந்த படம் வணிக ரீதியாக தோல்வி பெற்றதாக தில்லு முல்லு படத்தில் நடித்த பிரபலமே சொல்லியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் தான் தில்லுமுல்லு. அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் மற்றும் இந்திரன் என்ற இரண்டு விதமான நடிப்பை ரஜினி வெளிப்படுத்தி இருந்தார்.
தில்லு முல்லு படம் மிகவும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டு இருந்தது. இதில் ரஜினியின் தங்கையாக உமா கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் விஜி சந்திரசேகர். இப்போது இவர் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
தியேட்டரில் நஷ்டத்தை சந்தித்த தில்லு முல்லு படம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜி தில்லுமுல்லு படம் சூப்பர் ஃபிளாப் படம் என்று கூறி இருக்கிறார். அதாவது அப்போது ரஜினி ஆக்சன் படங்களில் நடித்து வந்ததால் அவரை காமெடி கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை.
இதனால் தியேட்டரில் இந்த படம் தோல்வியை அடைந்தது. அதன் பிறகு சின்னதிரையில் தில்லு முல்லு படம் ஒளிபரப்பாகும் போது ரசிகர்கள் பல தடவை இந்த படத்தை பார்த்தார்கள். ஆகையால் டிவியில் தான் தில்லுமுல்லு படம் ஹிட்டானது. தியேட்டரில் வசூல் செய்யவில்லை என்று விஜி கூறியிருந்தார்.
கமலின் அன்பே சிவம் படமும் இது போன்று தான் தியேட்டரில் வெளியாகி நஷ்டத்தை சந்தித்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு அன்பே சிவம் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதே நிலைமை தான் ரஜினியின் தில்லுமுல்லு படத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.