தீராத முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உளுந்து சட்னி ரெசிபியை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். முதுகு எலும்புகள் ரொம்பவும் வலிமையானவை எனினும் அடிக்கடி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வது, சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது, கால்சியம் சத்து குறைவது போன்ற காரணங்களால் முதுகு வலியால் அவதிப்பட நேரலாம். இந்த சுவையான உளுந்து சட்னி தயார் செய்து அடிக்கடி சாப்பிடுங்கள், முதுகு வலி போகும். உளுந்து சட்னி எப்படி அரைப்பது? என்பதை இனி பார்ப்போம்.
உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் ஒன்றரை – டேபிள் ஸ்பூன்
வெள்ளை முழு உளுத்தம் பருப்பு – முக்கால் கப்,
சின்ன வெங்காயம் – 30
தக்காளி பழம் – இரண்டு
வரமிளகாய் – ஐந்து
பூண்டு – ஆறு பல்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – சிறிதளவு.
உளுந்து சட்னி செய்முறை விளக்கம் :
முதுகு வலியை நீக்கும் இந்த அற்புதமான உளுந்து சட்னி தயார் செய்வதற்கு, முதலில் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 30 அளவில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு பழுத்த தக்காளி பழங்களை கழுவி சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நறுக்கி வையுங்கள். பூண்டு பற்களை தோலுரித்து வையுங்கள். கருவேப்பிலையை கழுவி கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் முக்கால் கப் அளவிற்கு உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். கண்ணாடி பதம் வர வதங்கியதும், தக்காளி பழத்தை சேர்த்து வதக்குங்கள்.
இவை ஒன்றும் பாதியாக வதங்கி வந்ததும், பூண்டு பற்களை சேர்த்து வதக்குங்கள். பின்னர் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தும் நன்கு சுருள வதங்கி வர வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடுங்கள். ஒரு நிமிடம் வதக்கியதும் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:
மூன்றாம் பிறை பண வசிய மந்திரம்
இப்போது ஒரு மிக்ஸர் ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடாயில் ஆறிய பொருட்களை சேர்த்து, ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள உளுந்தம் பருப்பை கடைசியாக சேர்த்து, நன்கு அரைக்க வேண்டும். இப்போது தாளிக்க தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், சூப்பரான ஆரோக்கியம் நிறைந்த உளுந்து சட்னி தயார்!
The post உளுந்து சட்னி appeared first on Dheivegam.