TVK-Vijay: திருப்புவனம் கோவில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் ஸ்டேஷனில் மரணம் அடைந்த விவகாரம் தற்போது அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நகை திருட்டு விசாரணையின் போது காவல்துறையினர் அவரை அடித்தே கொன்றுள்ளனர்.
இதற்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டத்தில் தற்போது ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விசாரணை நடந்துவரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை மூலம் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தற்போதைய ஆளும் கட்சியில் இதுவரை 24 லாக்கப் மரணங்கள் நடந்திருக்கிறது. அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.
4 ஆண்டுகளில் 24 லாக்கப் மரணம்
அஜித் குமார் மரணத்தில் காவல்துறையினர் தான் குற்றவாளி. அப்படி இருக்கும்போது அவர்களே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
இனி இது போன்ற கொடூர சம்பவம் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு க ஸ்டாலின் மக்களுக்கு உறுதியும் உத்திரவாதமும் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இந்த அரசுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள் என தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து அவர் அறிக்கை விட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்வதுதான் சரி.
அதை விட்டுவிட்டு எத்தனை நாளைக்கு இந்த பேப்பர் போராட்டம் நடத்துவீர்கள். முழுதாக களத்தில் இறங்குங்க என விஜய்க்கு பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.