தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த நடிகர் ஜெய், தனது இயல்பான நடிப்புக்கும், ஸ்டைலான தோற்றத்திற்கும் பெயர் பெற்றவர். இவரது திரைப்பட வாழ்க்கை 2002-ல் “பகவதி” படத்தில் விஜயின் தம்பியாக அறிமுகமானதை தொடக்கமாகக் கொண்டது. ஆனால், 2007-ல் “சென்னை 600028” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
அதற்குப் பிறகு “சுப்ரமணியபுரம்”, “எங்கேயும் எப்போதும்”, “ராஜா ராணி”, உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ள ஜெய், ரொமான்ஸ், காமெடி மற்றும் எமோஷனல் சினிமாக்களில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் ஜெய், பாபு விஜய் இயக்கியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள இந்த படத்தில், யோகி பாபு, ‘கருடா’ ராம், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர். படம் ஒரு அனுபவமாக மாறும் விதத்தில் வித்தியாசமான கதைக்கருவை கொண்டுள்ளது.
ரொமான்டிக் திரில்லர் வகையில் உருவாகும் இப்படத்தில், ‘லாக்-அப்’சீனில் போலீசிடம் ஜெய் அடிபடுகிற புகைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அந்த காட்சி இணையத்தில் வைரலாகி, ஜெய் உண்மையிலேயே போலீசிடம் மாட்டிக்கொண்டாரா? என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தை சுற்றி எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ஜெய் கூறியதாவது: “புதிய படத்தின் ஸ்டில்கள் வைரலாகி வருகிறது. அந்த லாக் அப் சீன்களில் நடித்தபோது என்னை அறியாமலே உடம்பே நடுங்கி விட்டது,” என்றார். “போலீசிடம் அடிவாங்கும் அந்த காட்சிகள் எனக்கு இதுவரை கிடையாத பதற்றத்தை ஏற்படுத்தின,” என உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த அனுபவம் தனது நடிப்பில் புதுமையை உருவாக்கியதாகவும் ஜெய் கூறுகிறார்.
இன்றைய சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை மையமாக கொண்டு இந்தக் கதை உருவாகியுள்ளது. மனதை தொடும் கதைகளில் நடிப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும் என்றார். அந்த விருப்பத்துக்கேற்பதாய் தான் என் படத் தேர்வுகளும் அமைந்து வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.