அக்ஷய் குமார் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வரும் அதிரடி ஹீரோ. ஆனால் அவர் படத்துக்குள் காட்டும் வீரத்தை விட, நிஜ வாழ்க்கையிலே அவர் காட்டும் மனிதநேயம்தான் உண்மையான ஹீரோவாக ஆக்குகிறது. சமீபத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் அதற்கு காரணமாக அமைந்தது.
பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில், ஸ்டண்ட் கலைஞர் ராஜு விபத்தில் உயிரிழந்ததை அக்ஷய் கவனத்தில் எடுத்தார். சினிமாவில் பின்புலத்தில் பாடுபடுகிறவர்களின் நிலையை உணர்ந்த அவர், அதற்கான தீர்வாக 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் தனிப்பட்ட காப்பீடு ஏற்பாடு செய்துள்ளார்.
அக்ஷய் குமார் செய்த செயல்
ஸ்டண்ட் கலைஞர்களின் வேலை இயல்பாகவே ஆபத்தானது. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ உதவிகள் இல்லாமல் போவதுதான் பரிதாபம். இவர்களில் பலருக்கு காப்பீட்டு வசதியே கிடையாது என்பதும் வேதனைக்குரியது.
ஒரு சிறிய விபத்தும் ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்வையும் குடும்பத்தையும் குலைக்கக்கூடியது. இதை உணர்ந்த அக்ஷய், அவர்களுக்காக உடல்நலம் மற்றும் விபத்து காப்பீடு உட்பட்ட பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கினார். இதில், 5 லட்சம் முதல் 5.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வசதி வழங்கப்படுகிறது.
இந்த செயல் நம் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கும் ஒரு பாடமாக அமையலாம். நாம் பெருமைபடுகின்ற நம் ஹீரோக்கள், இப்படியான சமூகப் பங்களிப்புகளை எடுத்துக்கொள்வது அதிகம் இல்லை. சிலர் நன்கொடை அளிப்பார்கள், ஆனால் இப்படித் துறையின் உட்பக்கங்களைப் புரிந்து நீடித்த தீர்வு அளிப்பது அரிது.
அக்ஷய் குமார் எடுத்த இந்த நடவடிக்கை, நட்சத்திரங்களின் உண்மையான சக்தி திரையில் அல்ல, திரையின் வெளியே மக்களுக்காக செய்யும் செயல்களில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. நம் தமிழ் நடிகர்களும் இதுபோன்ற மனிதநேயப் பணிகளில் அதிகமாக ஈடுபட விரும்ப வேண்டும். தங்கள் புகழை மட்டும் அல்ல, பொறுப்பையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.