நேற்று தமிழ் சினிமாவில் ஏராளமான புதிய படங்கள் வெளியானது. பன் பட்டர் ஜாம், கெவி, யாதும் அறியான், ஆக்கிரமிப்பு, சென்ட்ரல், ஜென்ம நட்சத்திரம், காலம் புதிது, இரவுப் பறவை என பட்டியல் நீளமானது. இந்தப் படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்த்தது பன் பட்டர் ஜாம் தான் எனலாம்.
பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் ஹீரோவாக நடித்த பன் பட்டர் ஜாம் படத்தில் பாவ்யா, ஆதியா ஆகிய இருவர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். குடும்ப பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த காமெடி படத்திற்கு விமர்சனங்கள் நல்லபடியாகவே வந்தன. “படம் ஜாலியாக இருக்கு”, “பார்ப்பதற்குச் சரியாக இருக்கு” என்ற பாசிட்டிவ் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தோன்றின.
பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்
விமர்சனங்கள் நல்லதாக இருந்தாலும் வசூல் முடிவுகள் ஏமாற்றமளிக்கிறது. Sacnilk இணையதளத்தின் தகவலின்படி பன் பட்டர் ஜாம் படம் முதல் நாளில் வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் கூட வசூல் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த படம், மக்கள் அதிகம் அறிந்த நடிகர் நடித்த படம் என்றாலும், சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் படத்தை விட குறைவான வசூலை பெற்றுள்ளது. இதுவே சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “இந்த படங்களை எடுத்து போட்ட பணத்தில் வேறு தொழில் பார்த்திருந்தால் லாபம் வந்திருக்கும்” என விமர்சிக்கின்றனர்.
சிறு பட்ஜெட் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிற தயாரிப்பாளர்களுக்கு, திரையரங்குகளில் வெற்றியை காண்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. நல்ல விமர்சனங்கள் இருந்தாலும் கூட மக்கள் திரையரங்குக்கு வர மறுப்பது முக்கிய பிரச்சனை. இதனால், அவர்களின் முயற்சி கனவாகவே மாறி வருகிறது.
இதன் பின்னணியில் அடுத்த வாரம் வெளியாக உள்ள தலைவன் தலைவி மற்றும் மாரீசன் படங்கள் மட்டுமே சிறு ஈர்ப்பு சக்தியாக உள்ளன. ரசிகர்கள் அந்த படங்களை நம்பி திரையரங்குகளில் திரும்ப வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவையும் தோல்வியடைந்தால், தமிழ் சினிமாவுக்காக ஆகஸ்ட் 14-ல் வரும் ரஜினியின் “கூலி” படமே கடைசி நம்பிக்கை என கூறப்படுகிறது.