Vijayakanth: ஒருவர் இருக்கும் போது அவருடைய அருமை தெரியாது. அருமை தெரியும் போது அவர் இருக்க மாட்டார் என்ற வாசகம் கேப்டன் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. எத்தனையோ பேருக்கு அவர் வாழ்க்கை கொடுத்திருக்கிறார்.
அதையெல்லாம் அவர் தன்னுடைய பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தியது கிடையாது. எல்லோருக்கும் சாப்பாடு திறமைசாலிகளுக்கு வாய்ப்பு என அவர் செய்த விஷயங்கள் ஏராளம். அவருடைய மறைவுக்கு பிறகு தான் ஒவ்வொருவரும் இதை வெளியில் சொல்லி வருகின்றனர்.
அப்படித்தான் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட்டை உருவாக்கிய படத்திற்கு எப்படி எல்லாம் உதவி செய்தார் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது. 1986ல் ஆபாவாணன் தயாரிப்பில் ஊமை விழிகள் படம் வெளியானது.
கிரைம் திரில்லர் பாணியில் ஃபிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களை வைத்து இப்படத்தை அரவிந்த்ராஜ் இயக்கியிருந்தார். அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படத்தில் விஜயகாந்த் வயதான தோற்றத்தில் நடித்திருப்பார்.
திறமைசாலிகளுக்கு பக்க பலமாய் இருந்த கேப்டன்
ஆரம்பத்தில் அவரை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கத்தான் அணுகி இருக்கிறார்கள். ஐந்து நாட்கள் நடித்துவிட்டு அந்த காட்சிகளை பார்த்த விஜயகாந்த் இன்னும் தேதிகள் கொடுக்கிறேன் படத்தை எடுங்கள் என சொல்லி இருக்கிறார்.
இதற்கு காரணம் அந்த மாணவர்கள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை. இவர்களுக்குள் திறமை இருக்கிறது. கண்டிப்பாக சாதிப்பார்கள் என்ற கணிப்புதான். ஆனால் அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என தயங்கி இருக்கிறார்கள்.
உடனே கேப்டன் தானே காசு போட்டு 35 நாட்கள் அந்த படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு சில ஏரியாக்களின் உரிமையை வாங்கி அவரே ரிலீஸ் செய்து இருக்கிறார்.
இப்படி வெளிவந்த படம் அதில் நடித்த எல்லோருக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதேபோல் அடுத்தடுத்து த்ரில்லர் படங்கள் வருவதற்கும் ஒரு வழிகாட்டியாக இப்படம் இருந்தது.
இவர்களுக்கு மட்டுமல்லாமல் அன்னைக்கு கிரியேஷன்ஸ் சிவா உள்ளிட்ட பல பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பெருமை கேப்டனை சேரும். அதேபோல் நடிகர் சங்கம் என்ற கட்டிடம் இன்று பிரம்மாண்டமாக நிற்பதற்கு காரணமும் இவர் தான் என்பதை மறுக்க இயலாது.