சமீபத்தில் முத்த மழை பாடல் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சின்மயி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் அவர் ஏன் இப்போது தமிழ் திரையுலகில் பாடாமல் உள்ளார் என்ற கேள்வி எழுந்தது. இதனால் அவரைச் சுற்றி செய்திகள் மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய Me Too பிரச்சனையில் சின்மயி முக்கிய குரலாக இருந்தார். 18 வயது பெண் ஒருவர் வைரமுத்துவால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியதாக கூறிய செய்தியை அவர் பகிர்ந்தார். தானும் பாதிக்கப்பட்டதாக வெளிப்படையாக தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு சின்மயிக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பாடகியாக மட்டுமன்றி வாய்ஸ் ஆக்டராகவும் இருந்த அவரை டப்பிங் சங்கம் தடை செய்ததாக அவர் கூறினார். இந்த தடையும் வழக்குகளும் இன்னும் நீடிக்கின்றன.
சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டில் அவர் பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களிடம் சூடான வரவேற்பு பெற்றது. இதனால், அவர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் குரல் எழுந்துள்ளது. இந்நிலையில்
பெண்களிடையே ஆரம்ப நிலை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐஸ்வர்யா மருத்துவமனை நவீன மார்பக மையத்தைத் திறந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்மயியிடம் பத்திரிகையாளர்கள் வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சின்மயி வைரமுத்துவை பற்றி என்கிட்டே மட்டும் தான் கேட்கணுமா? உலகத்தில் வேறு யாரும் இல்லையா? நீங்களும் ஒரு பொண்ணு தானே என்று பதிலளித்தார். 7 வருடமாக என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய விஷயத்தை விட இதைத்தான் கேட்கிறீர்களா? என்று கடுமையாக பதிலளித்தார்.
அவர் டப்பிங் சங்கத்தில் தன்னை தடை செய்த விவகாரம் இன்னும் வழக்கில் இருப்பதை நினைவூட்டினார். “ஊர்வசி அம்மா கூட தேசிய விருது பற்றி பேசி இருக்கிறார்கள் அதை கேட்காமல் டி.ஆர்.பி மட்டும் தேடுகிறீர்களா?” என ஆவேசமாக கேட்டார். சின்மயியின் இந்த சூடான பதில் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.