சளி மற்றும் இருமலுக்கு உதவும் இந்த மிளகு சாதம் செய்வது ரொம்பவே சுலபமானது. விதவிதமான வெரைட்டி ரைஸ்கள் இருந்தாலும், ஒரு சிலவை ஆரோக்கியத்தை காப்பதாக இருக்கிறது. சளி மற்றும் இருமல் இருக்கும் குழந்தைகளுக்கு, சூடான மற்றும் சத்தான உணவைக் கொடுப்பது மிகவும் முக்கியம். மிளகு சாதம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும் ஒரு அருமையான உணவாகும். இதை எப்படி இன்னும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்யலாம்? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கலாம், வாருங்கள்.
மிளகு சாதம் செய்ய தேவையான பொருட்கள் :
சாதம் – 1 கப்
நல்லெண்ணெய் மற்றும் நெய் – 2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி (புதிதாக அரைத்தது)
சீரகம் – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 5-6
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
மிளகு சாதம் செய்முறை விளக்கம் :
மிளகு சாதத்திற்கு, உதிரியான சாதம் தான் சிறந்தது. குக்கரில் சாதம் சமைக்கும் போது, சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சமைத்தால் சாதம் ஒட்டாமல் வரும். சாதம் வடித்து செய்பவர்கள் கவனமாக உதிரியாக வடித்து செய்யவும். சாதாரண அரிசியிலும் செய்யலாம், பாஸ்மதி அரிசியிலும் செய்யலாம். பாஸ்மதி அரிசி கொண்டு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். இப்போது தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி மற்றும் நெய் ஒரு தேக்கரண்டி சூடாக்கி, அதில் சீரகம், அரைத்த மிளகு, முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் உருவிய கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மிளகைப் புதிதாக அரைத்துச் சேர்த்தால், அதன் சுவை மற்றும் மணம் அதிகமாக இருக்கும். தாளித்த பொருட்கள் பொன்னிறமானதும், சூடான உதிரியாக வடித்த சாதத்தையும், தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்து மெதுவாகக் கிளறவும். சாதம் உடையாமல் கிளறுவது முக்கியம். மிளகு சாதம் சூடாக இருக்கும் போதே, டிபன் பாக்ஸில் போட்டு அனுப்பலாம். இதன் சுவை, சத்து மற்றும் மணம் குழந்தைகளுக்குப் பிடித்தமானதாக இருக்கும்.
மிளகு மற்றும் சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள், சளி, இருமல் மற்றும் தொண்டை வலியில் இருந்து குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கும். மிளகு சாதத்துடன், உருளைக்கிழங்கு வறுவல் அல்லது பூசணிக்காய் பொறியல் சேர்த்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சளி, இருமல் இருக்கும் போது, குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மிளகு சாதத்துடன் சூடான தண்ணீர் அல்லது சூப் கொடுக்கலாம். உணவு தயாரிப்பதற்கு முன், கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம். இது கிருமி தொற்று பரவாமல் தடுக்க உதவும்.
இதையும் படிக்கலாமே:
நோய்களை நீக்கும் துவரம் பருப்பு பரிகாரம்
இந்த மிளகு சாதம், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாக இருப்பதுடன், அவர்களின் உடலுக்குத் தேவையான வெப்பத்தையும், சத்தையும் அளித்து, நோயிலிருந்து விரைவில் மீள உதவும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்கவும், இருமல் தொந்தரவுகள் வராமல் இருக்கவும் வாரம் ஒரு முறையாவது இந்த மிளகு சாதத்தை தயார் செய்து கொடுக்கலாம். பெரியவர்களும் அடிக்கடி உணவில் மிளகாய் சேர்த்து வந்தால், நோய் வரும் முன் தடுத்து பாதுகாப்பாக இருக்கலாம்.
The post மிளகு சாதம் ரெசிபி appeared first on Dheivegam.