இன்றைய காலத்தில் பல குழந்தைகள் உடல் எடை மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களுடைய உடல் எடையை அதிகரிக்க முடியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பதற்கு பாதாம் பிசின் உதவி செய்யும். பொதுவாகவே பாதாம் பிசின் அதிக அளவு சத்து நிறைந்த பொருளாகவும் பாதாம் பிசினை தினமும் உண்பவர்களுக்கு உடலில் குளிர்ச்சி ஏற்படுவதோடு உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகள் தீரும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக பாதாம் பிசினை சர்பத், பழச்சாறு போன்றவற்றில் கலந்து தான் சாப்பிட வைப்போம். அவ்வாறு இல்லாமல் பாதாம் பிசினை வைத்து செய்யக்கூடிய ஒரு லட்டுவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பாதாம் பிசின் – 50 கிராம்
வெல்லம் – 300 கிராம்
கோதுமை மாவு – 300 கிராம்
நெய் – 100 கிராம்
தேங்காய் துருவல் – 1/4 கப்,
பாதாம் முந்திரி – விருப்பத்திற்கு ஏற்ப
– Advertisement –
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 25 எம்எல் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் அதில் பாதாம் பிசினை போட்டு குறைந்த தீயில் வைத்து நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். இது பொரிவதற்கு சற்று நேரமாகும். எப்படி சோளம் பொரிந்து வருமோ அதேபோல் இந்த பாதாம் பிசினும் பொரிந்து அளவில் சற்று பெரியதாகி வரும். அவ்வாறு வந்த பிறகு அதை நெய்யில் இருந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். மேலும் நெய்யில் பாதாம் பிசினை போடும்பொழுது சிறிது சிறிதாக போட வேண்டும். அனைத்து பாதாம் பிசினையும் மொத்தமாக போடக்கூடாது.
பாதாம் பிசின் அனைத்தையும் பொறித்து எடுத்த பிறகு மீதம் இருக்கக்கூடிய நெய்யுடன் திரும்பவும் ஒரு 25எம்எல் நெய்யை ஊற்றி அதில் கோதுமை மாவை போட்டு பச்சை வாடை போகும் வரை வறுக்க வேண்டும். இதன் நிறம் முற்றிலும் மாற வேண்டும். மேலும் இதை குறைந்த தீயில் வைத்து தான் செய்ய வேண்டும். நிறம் நன்றாக மாறி பச்சை வாடை போன பிறகு அதையும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பவும் அதே கடாயை அடுப்பில் வைத்து 25 எம்எல் நெய்யை ஊற்றி அதில் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயின் ஈரப்பதம் போக வரையும் அதன் நிறம் நன்றாக மாறும் வரையும் வறுக்க வேண்டும். இவ்வாறு வறுத்தப்பிறகு அதை எடுத்து ஏற்கனவே வைத்திருக்கும் கோதுமை மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –
கடைசியாக மீதம் இருக்கக்கூடிய நெய்யை கடாயில் ஊற்றி பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக உருகும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். வெல்லம் உருக நேரமாகும் என்னும் பட்சத்தில் சிறிதளவு மட்டும் தண்ணீரை தெளித்து உருக்க வேண்டும். தண்ணீரை ஊற்றி வெல்லத்தை உருக்கக் கூடாது. வெல்லம் முழுவதும் கரைந்ததும் அதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து ஏற்கனவே பொரித்து வைத்திருக்கும் பாதாம் பிசினை அதில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் வறுத்து வைத்திருக்கும் கோதுமை மாவு, தேங்காய், அரைத்து வைத்திருக்கும் பாதாம் பிசின் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் விருப்பம் இருப்பவர்கள் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை போடலாம். பிறகு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை அதனுடன் சேர்த்து கரண்டியை வைத்து நன்றாக கலந்து விடுங்கள். இது நன்றாக சூடாக இருக்கும் பொழுது தான் ஒன்றோடு ஒன்று சேரும். பிறகு கை பொறுக்கும் அளவு சூடு வந்ததும் இந்த மாவை எடுத்து உருண்டையாக பிடித்து வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சத்தான பாதாம் பிசின் லட்டு தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: வாழைப்பழ கேக்
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்களும் மெலிந்த உடலை தேற்ற வேண்டும் என்று நினைப்பவர்களும் வீட்டிலேயே இப்படி ஆரோக்கியமான முறையில் சத்து மிகுந்த பாதாம் பிசின் லட்டுவை தயார் செய்து சாப்பிடலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோ