Vijay: தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) மதுரை மாநாட்டில், தலைவர் விஜய், கேப்டன் விஜயகாந்தை “அண்ணன்” என்று குறிப்பிட்டார். இந்த ஒரு வார்த்தையே சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பரவலான பேச்சு பொருளாக மாறியது.
“விஜய் எங்க வீட்டு பையன் தான்” – பிரேமலதாவின் கருத்து
கேப்டனின் மனைவியும், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMDK) தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் “விஜய் எப்போதுமே எங்கள் வீட்டு பையன் தான். எங்கள் குடும்பங்களுக்குள் பல வருடங்களாக உறவு உள்ளது. அவர் கேப்டனை அண்ணன் என்று சொல்வதால், எப்போதுமே எங்களுக்கு தம்பிதான்,” என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணி சாத்தியத்தை வலுப்படுத்தும் சிக்னல்
இதுவரை தேமுதிக எந்த கூட்டணி பற்றியும் தெளிவாக அறிவிக்கவில்லை. ஆனால் பிரேமலதாவின் இந்த கருத்து, தவெக-தேமுதிக கூட்டணி சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏற்கனவே விஜய், பாஜக தான் தன்னுடைய முக்கிய எதிரி என்று வெளிப்படையாக அறிவித்த நிலையில், இந்த கருத்து, அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது.
ரசிகர்களின் உணர்ச்சி இணைப்பு
சமூக வலைதளங்களில், விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் இணைந்து, “கேப்டன் – தளபதி” உணர்ச்சி பூர்வ இணைப்பை ஏற்கனவே போதும் போதும் என்ற அளவுக்கு கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் கேப்டனை அண்ணன் என்று சொன்னதும், பிரேமலதா விஜய்யை கேப்டனின் தம்பியாக ஏற்றுக் கொண்டதும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அடுத்த கட்ட அரசியல் சமிக்ஞை
தமிழக அரசியலில் அடுத்த தேர்தல் கூட்டணிகள் முக்கிய பங்காற்றும் நிலையில், பிரேமலதாவின் கருத்து ஒரு சாதாரண நட்பு ரீதியான பேச்சாக இல்லாமல், தவெக – தேமுதிக இணைப்பின் ஆரம்ப சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி மட்டும் உறுதியானால் விஜயகாந்த் ரசிகர்களின் பேராதரவை விஜய் பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.