இவ்வருடம் விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் பொருத்தமான, சுவையான பூரண கொழுக்கட்டை செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை எளிதாக வீட்டிலேயே செய்து விநாயகருக்கு நைவேத்தியம் படைக்கலாம். முதன் முதலில் கொழுக்கட்டை செய்ய விரும்புபவர்கள் கூட எளிமையாக செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள, இந்த விநாயகர் சதுர்த்தி சுவையான பக்தி பூரண கொழுக்கட்டை எப்படி தயார் செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
பூரண கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் :
பூரணத்திற்கு (உள்ளே வைப்பதற்கு):
துருவிய தேங்காய் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை மாவு – ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை மாவு – ஒரு தேக்கரண்டி
கருப்பு எள்ளு பொடி – கால் தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
மாவு பிசைவதற்கு (வெளிப்புற உறைக்கு):
இடியாப்பம் மாவு அல்லது அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1.5 கப்
நல்லெண்ணெய் அல்லது நெய் – 1 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
– Advertisement –
பூரணம் தயாரித்தல்:
ஒரு வாணலியை மிதமான தீயில் வைத்து, அதில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைய விடுங்கள். வெல்லம் நன்கு கரைந்ததும், வடிகட்டி அதில் உள்ள தூசுகளை நீக்கிவிடுங்கள். மீண்டும் வடிகட்டிய வெல்லப் பாகை வாணலியில் ஊற்றி, துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறுங்கள். பொட்டுக்கடலை மாவு, வேர்க்கடலை, எள்ளு பொடி ஆகியவற்றை சேர்க்கவும், பின் கலவை கெட்டியாகி, வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். கடைசியில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆற வையுங்கள்.
கொழுக்கட்டை மாவு தயாரித்தல்:
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர், நெய் அல்லது எண்ணெய், மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி படாமல் கரண்டியால் கிளறுங்கள். மாவு நன்கு கலந்ததும், பாத்திரத்தை மூடி 5 நிமிடம் அப்படியே வையுங்கள். கலவை சற்று சூடு ஆறியதும், கையில் எண்ணெய் தடவி, மாவை நன்கு பிசைந்து மிருதுவான பதத்திற்கு கொண்டு வாருங்கள்.
– Advertisement –
கொழுக்கட்டை செய்தல்:
பிசைந்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, அதை கையில் வைத்து தட்டையாகவும், கிண்ணம் போலவும் செய்யுங்கள். அதன் நடுவே ஒரு தேக்கரண்டி அளவு தயார் செய்து வைத்த பூரணத்தை வையுங்கள். மாவு கிண்ணத்தின் விளிம்புகளை ஒன்று சேர்த்து, கொழுக்கட்டை வடிவம் கொடுத்து மூடுங்கள். இதை கையில் வைத்து அழுத்தி மூடினாலும் அல்லது கொழுக்கட்டை அச்சை பயன்படுத்தியும் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:
விநாயகர் சதுர்த்தி வழிபாடு முறை
ஆவியில் வேக வைத்தல்:
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதன் மேல் தயார் செய்த கொழுக்கட்டைகளை வையுங்கள். கொழுக்கட்டைகளை சுமார் 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் ஆவியில் வேக வையுங்கள். மாவு வெளிப்பக்கம் பளபளப்பாக மாறியதும், அவை வெந்துவிட்டன என்று அர்த்தம். சுவையான பூரண கொழுக்கட்டை இப்போது விநாயகர் சதுர்த்திக்கு படையல் செய்யத் தயாராக உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்.