எல்லா குழம்புகளும் சுலபமாக வைத்து விடுபவர்களுக்கு கூட சில சமயங்களில் ரசம் மட்டும் வைப்பது சவாலானதாக இருக்கும். ரசம் வைத்தால் அதை அப்படியே குடித்து விட வேண்டும். அந்த அளவிற்கு ருசியாக ரசம் வைக்க வேண்டும் என்றுதான் எல்லோருக்கும் ஆசையாக இருக்கிறது. எவ்வளவு வீடியோக்கள் பார்த்தும் சுவையான ரசம் வைக்க முடியவில்லை என்பவர்கள் இப்படி ஒரு முறை வைத்து பாருங்கள், எல்லோருமே பாராட்டுவார்கள். சுவையான தக்காளி ரசம் வைப்பது எப்படி? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்க இருக்கிறோம்.
தக்காளி ரசம் செய்ய தேவையான பொருட்கள் :
பழுத்த தக்காளி பழம் – 2
புளி நெல்லிக்காய் – அளவு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை – ஒரு கொத்து
தனியா விதை – ஒன்றரை டீஸ்பூன்
சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் – ஒன்று
பூண்டு – 10 பல்
வெந்தயம் – பத்து எண்ணிக்கை
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – இரண்டு
வரமிளகாய் – ஒன்று
– Advertisement –
தக்காளி ரசம் செய்முறை விளக்கம் :
இந்த தக்காளி ரசம் வைப்பதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்து ஒருமுறை அலசி தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். ஒரு மிக்சர் ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் மல்லி விதைகள், மிளகு, சீரகம், ஒரு வரமிளகாய், பத்து வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை மிக்ஸியை இயக்கி அரைத்துக் கொள்ளுங்கள்.
ரொம்பவும் நைஸ் ஆக அரைக்க கூடாது. விழுது கொஞ்சம் கொரகொரவென்று இருக்க வேண்டும். பின்னர் பத்து பூண்டு பற்களை தோலுடன் அப்படியே சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுங்கள். ஒன்றும் பாதியாக அரைப்பட்ட இந்த ரசப்பொடியை தனியாக எடுத்து வையுங்கள். இப்போது புளியை நன்கு கரைத்து அதில் இருக்கும் சாக்கையை எடுத்து விடுங்கள். ரெண்டு பழுத்த தக்காளி பழங்களை காம்பு பகுதியை நீக்கிவிட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நறுக்கி நன்கு கைகளால் புளி தண்ணீரில் சேர்த்து பிசைய வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
– Advertisement –
தக்காளியுடன் ஒரு கொத்து கருவேப்பிலை, அரை கைப்பிடி கொத்தமல்லியை நறுக்கி சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். அப்போது தான் ருசி அபாரமாக இருக்கும். ரசத்திற்கு தேவையான புளி கரைசல் தயாரானதும் அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து தாளிக்க தேவையானவற்றை எடுத்து வையுங்கள். எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து, ஒரு வரமிளகாய், இரண்டு பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
காமாட்சி அம்மன் விளக்கு பலன்
இவற்றை போட்டு தாளித்ததும் நீங்கள் தயார் செய்து எடுத்து வைத்துள்ள ரசப்பொடியை சேர்த்து லேசாக ஒரு நிமிடம் மட்டும் வதக்கி விட்டு புளி கரைசலை ஊற்றிக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு இடத்தில் மட்டும் நுரை விலகி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லியையும் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் வீடே மணக்கும் அருமையான தக்காளி ரசம் ரெடி!