ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி கோகுலாஷ்டமி அன்றைய தினத்தில் கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை பலரும் வைத்திருப்போம். அவ்வாறு கிருஷ்ணரை அழைத்து வழிபாடு செய்யும்பொழுது கிருஷ்ணருக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணருக்கு பலகாரங்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். அதனால் அனைத்து விதமான பலகாரங்களையும் செய்து வைக்க வேண்டும். இதோடு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருளாக அவல் திகழ்கிறது. இந்த அவலை பயன்படுத்தி பல விதங்களில் பல இனிப்பு பொருட்களை செய்யலாம் என்றாலும் மிகவும் எளிமையாக சுவையான அவல் பாயாசத்தை செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை அவல் – ஒரு கப்
சர்க்கரை – 1/2 கப்
தண்ணீர் – 1/4 கப்
காய்ச்சிய பால் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்
திராட்சை – ஒரு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்
பச்சை கற்பூரம் – கடுகளவு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் வெள்ளை அவலை எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற்றிவிட்டு சிறிதளவு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு பத்து நிமிடம் ஊற விட வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். சர்க்கரை நன்றாக கரைந்து நிறம் மாறும். அவ்வாறு நிறம் மாறிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு அதில் தண்ணீர், பால் போன்றவற்றை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு ஊற வைத்திருந்த அவலையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை பற்றவைத்து அந்த குக்கரை வைத்து குக்கரின் மூடியை போட்டு மூடி ஒரு விசில் வரும் வரை விட்டு விடுங்கள். ஒரு விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். விசில் போனதும் மூடியை திறந்து பார்த்தால் அவல் பாயசம் தயாராக இருக்கும். இதற்கு கூடுதல் சுவை சேர்க்கும் வண்ணம் ஒரு தாளிப்பு கரண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றுங்கள். நெய் உருகியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
தேங்காயின் நிறம் சிறிது மாறியதும் முந்திரியையும் அதனுடன் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் நன்றாக சிவந்த பிறகு இதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் பாயசத்தில் ஊற்றி விட வேண்டும். மீதம் இருக்கக்கூடிய ஒரு ஸ்பூன் நெய் திரும்பவும் அதே தாளிப்பு கரண்டியில் போட்டு நெய் உருகியதும் நாம் எடுத்து வைத்திருக்கும் திராட்சையும் போட்டு அது நன்றாக பொரிந்ததும் அதையும் எடுத்து நெய்யுடன் பாயாசத்தில் ஊற்றி விடுங்கள். வாசனைக்காக ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் சுவையான அவல் பாயாசம் தயாராக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: மிளகு சாதம் ரெசிபி
கிருஷ்ணருக்கு பிடித்தமான பொருட்களை வைத்து கோகுலாஷ்டமி அன்று வழிபாடு செய்பவர்களுக்கு கிருஷ்ணனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் இந்த எளிமையான அவல் பாயாசத்தையும் செய்து வைத்து கிருஷ்ணனின் அருளை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் appeared first on Dheivegam.