இன்றைய காலத்தில் பலரும் காலையிலும் இரவு நேரத்திலும் டிபன் வகைகளையே அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு டிபன் வகைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்காக ஏதாவது ஒரு சட்னியை தயார் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி தயார் செய்யக்கூடிய சட்னி அதிக அளவு ஊட்டச்சத்து மிகுந்த சட்னியாக இருக்கும் பட்சத்தில் அதை தவறாமல் நாம் செய்யலாம் அல்லவா? அந்த வகையில் பலவிதமான அற்புத சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரையை பயன்படுத்தி முருங்கைக்கீரை சுவையே தெரியாத அளவிற்கு ருசியாக முருங்கைக்கீரை சட்னி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை – 2 கைப்பிடி அளவு
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
தக்காளி – ஒன்று
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 2
புளி – ஒரு சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வேர்க்கடலை, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் இவை நான்கையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தது திரும்பவும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், புளி போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்த பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை அதில் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் லேசாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
– Advertisement –
ஏற்கனவே நாம் கொரகொரப்பாக அரைத்து வைத்திருந்த வேர்க்கடலையுடன் நாம் இப்பொழுது வதக்கி வைத்திருக்கும் இந்த முருங்கைக் கீரையையும் சேர்த்து இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான முருங்கைக்கீரை சட்னி தயாராக இருக்கும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டினியில் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக எப்பொழுதும் சட்னியை தாளிப்பது போல் தாளித்தால் போதும்.
இதையும் படிக்கலாமே: தேங்காய் எண்ணெய் தயாரித்தல்
கீரைகளிலேயே அதிக சத்து மிகுந்த கீரையாக திகழ்வது முருங்கைக்கீரை என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருங்கைக் கீரையை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் முருங்கைக் கீரையில் இருக்கக்கூடிய சத்துக்கள் குறையாத வண்ணமும் இப்படி முருங்கைக்கீரை சட்னி செய்து கொடுக்கலாம்.