நமக்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய காய்கறிகளை நாம் முழுமையாக பயன்படுத்தும் பொழுது நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கிறது. அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான காய்கறிகள் ஒன்றாக திகழ்வதுதான் கோவக்காய். கோவக்காயை பலரும் கூட்டாகவும் பொறியலாகவும் செய்து சாப்பிடுவார்கள். அதற்கு பதிலாக மோர் குழம்பு செய்து கொடுத்தோம் என்றால் அதன் சுவையில் மெய்மறந்து போவார்கள் என்று கூறலாம். வெயிலுக்கு குளிர்ச்சிகரமாக மோர் குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
கோவக்காய் – 150 கிராம்
தயிர் – ஒரு கப்
பூண்டு – 2 பல்
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் கோவக்காயை தண்ணீரில் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து அதன் காம்பு பகுதிகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பூண்டு, தோல் நீக்கப்பட்ட இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து இவற்றை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்து, கடலைப்பருப்பும் சிவந்த பிறகு அதில் கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும். அடுத்ததாக நாம் நறுக்கி வைத்திருக்கும் கோவக்காயையும் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்ததாக இதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் மூடி போட்டு கோவக்காயை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
பிறகு மூடியை திறந்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த விழுதை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். பச்சை வாடை போன பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் கெட்டியாக இருக்கக்கூடிய புளிக்காத தயிரை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோவக்காய் மோர் குழம்பு தயாராகிவிட்டது. தங்களுக்கு விருப்பமான வகையில் மோர் குழம்பின் தன்மைக்கேற்றவாறு தண்ணீரை கலந்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: புதினா சட்னி வகைகள்
என்ன குழம்பு செய்வது என்று புரியாமல் இருப்பவர்கள் மிகவும் எளிதில் அதே சமயம் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இப்படி கோவக்காய் மோர் குழம்பை செய்து கொடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அசந்து போவார்கள்.