எந்த ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் நம்முடைய வீட்டில் நாம் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை செய்து வைக்கும் வழக்கத்தை வைத்திருப்போம். அப்படி நாம் செய்யக்கூடிய இனிப்பு பொருட்களில் பொதுவானவையாக திகழ்வது சர்க்கரைபொங்கல், கேசரி, பால் பாயாசம் போன்றவை. இதை தவிர்த்து சற்று கூடுதலாக சிரமப்பட்டு அதே சமயம் ஆரோக்கியமான ஒரு இனிப்பு பொருளை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தேங்காயையும் பாலையும் வைத்து இப்படி ஒரு முறை தேங்காய் லட்டு செய்து கொடுக்கலாம். நெய்யே பயன்படுத்தாமல் எப்படி தேங்காய் லட்டு செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் – ஒன்று
பால் – 1/2 லிட்டர்
வெல்லம் – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
பொட்டுக்கடலை – ஒரு கப்
பீட்ரூட் சாறு – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – விருப்பத்திற்கு ஏற்ப
– Advertisement –
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரை லிட்டர் பாலை ஊற்று வேண்டும். பால் லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு தேங்காயை உடைத்து அதில் இருக்கக்கூடிய தேங்காயை சிறு சிறு துண்டுகளாக கீறி கொதிக்கின்ற பாலில் சேர்த்து விட வேண்டும். தேங்காய் பாலில் நன்றாக கொதிக்க வேண்டும். பால் கெட்டியாக வேண்டும். இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆரவைத்துக் கொள்ளுங்கள். ஆரிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைய விட வேண்டும். இது கரைந்து சற்று கெட்டியான பதம் வந்தால் போதும். அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இதற்கு கம்பி பதம் எதுவும் தேவையில்லை. அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பொட்டுக்கடலையை போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து அதில் நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும்.
– Advertisement –
அடுத்ததாக இதில் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் வெல்லக் கரைசலை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். அடுத்ததாக இதனுடன் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக் கடலை மாவையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு பீட்ரூட்டை போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து அதில் இருந்து மூன்றிலிருந்து நான்கு ஸ்பூன் சாறை மட்டும் ஊற்றி நன்றாக கிண்ட வேண்டும். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கை பொறுக்கும் அளவிற்கு சூடு வந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் ஒவ்வொரு உருண்டைக்கு மேலும் ஒரு முந்திரி பருப்பை வைக்கலாம். மிகவும் சுவையான தேங்காய் லட்டு தயாராகிவிட்டது. தேங்காயிலேயே எண்ணெய் தன்மை இருக்கும் என்பதால் இதற்காக நாம் தனியாக நெய் போன்ற எந்த பொருட்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிக்கலாமே: காய்கறிகள் பாதுகாப்பு டிப்ஸ்
எப்பொழுதும் போல் ஒரே மாதிரி இனிப்பு செய்யாமல் இப்படி தேங்காயும் பாலையும் வைத்து ஒருமுறை தேங்காய் லட்டு செய்து கொடுத்து பாருங்கள். சுவையும் அற்புதமாக இருக்கும். செலவு அதிகம் ஏற்படாது.