நம்முடைய முன்னோர்கள் காலையில் ராஜாவைப் போல் உண்ண வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் காலையில் நாம் எடுக்கக்கூடிய உணவுதான் அன்றைய நாளை நமக்கு தீர்மானிக்க கூடியவை. அந்த வகையில் காலையில் எடுக்கக்கூடிய உணவு மிகவும் சத்து மிகுந்த ஆரோக்கிய உணவாக இருக்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது ராகி என்று கூறக்கூடிய கேழ்விரகில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த ராகியை பயன்படுத்தி மிகவும் எளிமையான முறையில் காலை உணவாக ராகி உப்புருண்டை தயார் செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு – ஒரு கப்
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1 1/2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 இன்ஞ்
வெங்காயம் – ஒன்று
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, சீரகம்,, கடலைப்பருப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். உளுந்தும் கடலைப்பருப்பும் நன்றாக சிவந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி லேசாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையும் அதில் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கி அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் ராகி மாவை அதில் சேர்த்து கட்டி இல்லாத அளவிற்கு நன்றாக கலக்க வேண்டும். ராகி மாவு அனைத்து தண்ணீரையும் உறிஞ்சி கெட்டியான பதத்திற்கு வரும்.அப்படி வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ளலாம். கை பொறுக்கும் சூடு வந்த பிறகு இதை எடுத்து உருண்டைகளாக உருட்டியோ அல்லது கொழுக்கட்டை பிடிப்பது போல பிடித்து வைக்கலாம்.
இப்பொழுது அடுப்பில் ஒரு இட்லி சட்டியை வைத்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு இட்லி தட்டில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் உருண்டியை வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ராகி உப்பு உருண்டை தயாராகிவிட்டது. இந்த உப்பு உருண்டையை காலை நேர உணவாகவோ அல்லது பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் தரலாம்.
இதையும் படிக்கலாமே: முருங்கைக் கீரை சட்னி செய்முறை
இந்த முறையில் ராகியை பயன்படுத்தி உப்பு உருண்டை செய்து தரும் பொழுது ராகியை வைத்து இப்படி கூட சுவையாக செய்யலாமா என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு போவார்கள். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.