
தேங்காய் திரட்டி அல்வா செய்வதற்கு ஒரு முழு தேங்காய் தேவை. திருநெல்வேலி அல்வா கூட தோத்து போகும் அளவிற்கு இதனுடைய சுவை நிச்சயம் இருக்கும். வாயில் வைத்தாலே வைத்தது கூட தெரியாமல் கரைந்து போய்விடும். அவ்வளவு ருசியாக இருக்கக்கூடிய இந்த தேங்காய் திரட்டி அல்வா, பாசிப்பருப்பு மாவையும் சேர்த்து செய்கிறோம். ரொம்பவே ருசி தரக்கூடிய இந்த தேங்காய் திரட்டி அல்வா இதே முறையில், இதே அளவுகளில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கும் ரொம்பவே பிடித்து போய்விடும். தேங்காய் திரட்டி அல்வா செய்வது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து இனி அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தேங்காய் திரட்டி அல்வா செய்ய தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – 2 மேஜை கரண்டி
தேங்காய் – ஒன்று
வெல்லம் – முக்கால் கப்
அரிசி மாவு – ஒரு மேஜை கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
ஏலக்காய் – 4
நெய் – தேவையான அளவு
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
தேங்காய் திரட்டி அல்வா செய்முறை விளக்கம் :
இந்த தேங்காய் திரட்டி அல்வா செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முழு தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்து வைத்துள்ள தேங்காயை உடைத்து தேங்காய் பத்தைகளாக பிரித்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள், அல்லது துருவலில் போட்டு துருவியும் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான பாத்திரம் ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இது ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்த பாசிப்பருப்பு மாவுடன், எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து, நான்கு ஏலக்காய்களை போடுங்கள்.
பின்னர் அதனுடன் ஒரு மேசை கரண்டி அளவிற்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை கூடுதலாக ஆக்குவதற்கு முக்கால் கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு போட்டு, தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் நான்ஸ்டிக் பேன் ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி காய விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
அதனுடன் நீங்கள் விருப்பப்பட்ட அளவின்படி முந்திரி பருப்புகள், திராட்சை மற்றும் துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் நீங்கள் அரைத்த விழுதையும் சேர்த்து கட்டி தட்டாமல் கிண்டி விட வேண்டும். இடையிடையே தேவையான அளவிற்கு நெய் சேர்த்து கிண்டி விடுங்கள். பேனில் ஒட்டாமல் ஒரு பத்து நிமிடம் நன்கு கிண்டி விட வேண்டும். கடைசியாக நீங்கள் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சைகளை சேர்த்து நன்கு கலந்து விட்டு கிண்டுங்கள். அல்வா பதத்திற்கு கெட்டியாக திரண்டு வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். அருமையான தேங்காய் திரட்டி அல்வா ரெடி!
The post தேங்காய் திரட்டி ஹல்வா appeared first on Dheivegam.