இசையுலகில் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இசைமைப்பாளர்கள். இளையராஜா இந்திய இசையுடன் மேற்கு இசையை கலந்த இசை பாடல்களில் மாயாஜாலம் காட்டினார். ஏ.ஆர். ரஹ்மான் உலகத் தரத்தில் இசையை கொண்டு வந்து, இந்திய இசையை சர்வதேச ரீதியில் புகழ் பெற வைத்தவர்.
இவர்கள் இருவரும் ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசம் ஏற்படுத்த வேண்டும் என்ற இலட்சியத்தோடு வேலை செய்தவர்கள். அதற்கான சிறந்த உதாரணமாகக் கூற வேண்டுமானால், அவர்கள் உருவாக்கிய அகபெல்லா பாடல் தான். இசைக்கருவிகள் இல்லாமல் வெறும் கோரஸ் குரல் மூலம் பாடல் அமைப்பது சுலபம் அல்ல. ஆனால் இருவரும் அதை சாத்தியமாக்கியது அவரது மேதை தன்மையே வெளிப்படுகிறது.
1995-ம் ஆண்டு இயக்குநர் கேயார் இயக்கத்தில் வெளியான “மாயாபஜார்” திரைப்படத்தில் தான் இந்த வித்தியாசமான பாடல் இடம் பெற்றது. ராம்கி, ஊர்வசி, விவேக், விசு, சின்னி ஜெயந்த் என பலர் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இசையமைத்திருந்தார். இப்படத்தை பஞ்சு அருணாச்சலத்தின் மனைவி மீனா தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற “நான் பொறந்து வந்தது” என்ற பாடலே அகபெல்லா ஸ்டைலில் உருவானது. எஸ். ஜானகியின் குரலில் இப்பாடல் அமைந்தது, பின்னணியில் லேகா, விஜி, அனுராதா, கீதா ஆகியோரின் கோரஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்பாடலின் வரிகளை இளையராஜா தானே எழுதியிருந்தார் என்பது ஒரு சுவாரஸ்ய தகவல்.
இந்த பாடல் மிகவும் தரமான ஒரு முயற்சியாக இருந்தாலும், படம் தோல்வியடைந்ததால் பெரிதளவில் கவனம் பெறவில்லை. அதனால் இப்பாடல் இளையராஜாவின் underrated முயற்சிகளில் ஒன்றாகவே இருந்து விட்டது. ஆனால் இசைக்கருவிகள் இல்லாமல் வெறும் குரல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதனால் இது ஒரு வகையில் இசையின் வித்தியாசமான சோதனை எனலாம்.
இதைவிட இவருக்கு முன்னே ‘அகபெல்லா’ எனும் பாணியில் பாடலை உருவாக்கியவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். 1993-ம் ஆண்டு வெளியான திருடா திருடா படத்தில், ‘ராசாத்தி’ பாடலை வெறும் கோரஸில் மட்டும் அமைத்து, அகபெல்லா பாணியில் ஆளுமை காட்டினார். இருந்தாலும் இளையராஜாவின் ‘நான் பொறந்து வந்தது’ பாடல் மிகுந்த கலைநயம் கொண்ட, உயர்தரமான ஒரு பாடலாக இருந்தாலும் அதற்குரிய பாராட்டை பெறவில்லை என்பது வருத்தத்துக்குரியது