தமிழ் மொழி, உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகள் இலக்கிய மரபைக் கொண்ட இது, உயிர்மிகு கலாச்சாரத்தின் அடையாளம்.
இந்திய மொழிகளில் முதன்முதலில் அச்சேறிய பெருமை தமிழுக்கே சொந்தம் என்பதே இந்த தம்பிரான் வணக்கம் நூல் மூலம் வெளிப்படுகிறது. இது தமிழ் அச்சுக்கலையின் தொடக்கத்தையும், தமிழரின் அறிவுப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
1578-ஆம் ஆண்டு, போர்த்துக்கீசிய பாதிரியார் என்றிக்கே என்றீக்கசு எழுதிய கிறிஸ்தவ போதனையின் தமிழாக்கமாக “தம்பிரான் வணக்கம்” என்ற நூல் கொல்லத்தில் (இன்றைய கேரளா) அச்சிடப்பட்டது. இந்நூல் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகளிலேயே அச்சில் வந்த முதல் நூல் என்பதாலும் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
இந்த நூலின் முக்கிய செய்தி என்னவென்றால் மொத்தம் 11 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டன. அவை அனைத்தும் இன்று காண முடியாதவையாகிவிட்டன. ஆனால், இந்தியாவில் அச்சு வந்த முதல் நூலின் ஒரே ஒரு பிரதியே தற்போது அமெரிக்காவின் “ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்” பாதுகாக்கப்படுகிறது. இது தமிழின் அறிவு செல்வத்தின் ஒரு பாகம் பறிபோனதை நினைவூட்டுகிறது.
தமிழ், ஒரு செம்மொழி என்பதோடு, நூற்றாண்டுகளாக வளம் பெற்ற இலக்கிய மரபைக் கொண்ட உயிர்மொழியாகும். அச்சின் வருகை, அந்த மரபை மக்கள் மத்தியில் பரப்பும் புதிய படிக்கட்டாக இருந்தது. ஏடுகளில் பாதுகாக்கப்பட்ட நூல்கள், அச்சு மூலமாக அனைவரையும் எட்டும் நிலைக்கு வந்தன. இதன் மூலம் அறிவும், மொழியின் வீரியமும் பரவியது.
அதே காலத்தில் அதே காலத்தில் ஷேக்ஸ்பியர் சிறுவயதில் இருக்கும்போதே தமிழில் தம்பிரான் வணக்கம் புத்தகம் அச்சு வந்திருந்தது என்பது தென்னிந்திய கலாச்சாரத்தின் வளர்ச்சி எவ்வளவு முன்னேறியிருந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இன்று அனைவரும் நம் தலைமுறையினருக்கு ஷேக்ஸ்பியர் வரலாறை கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் தமிழில் அச்சு வந்த அந்த பழம் பெருமை வாய்ந்த வரலாற்றை நாம் மறந்துவிட்டோம் என்பது வருத்தமானது.
இந்த உண்மைகள் நம் வருங்கால தலைமுறைகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தமிழின் தொன்மை, அறிவின் செழிப்பு, அச்சு வளர்ச்சியின் பங்கு ஆகியவை அவர்களுக்கு புரிய வைக்கப்பட வேண்டும். இது நம் அடையாளம். அதை நாம் மண்ணோடு புதைக்காமல், மனதுடன் பேண வேண்டும்.