இசைஞானி இளையராஜாவின் இசை மட்டும் அல்லாது, அவரது குரலுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஆனால், ஒரு படத்தில் அவர் பாடிய பாடலை தவிர்த்து, யுவன் சங்கர் ராஜாவின் பாடல் தேர்வு செய்யப்பட்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படம் இயக்குனர் சுசீந்திரனின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றது. மூன்று வெற்றிப் படங்கள் வெளியான பிறகு ‘ராஜபாட்டை’ படம் தோல்வி அடைந்தது. அந்த நிலைமையில் இந்த படத்தை அவர் எடுத்தார் என்கிறார்.
இதை பற்றி லிட்டில் டாக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அண்மையில் இயக்குநர் சுசீந்திரன் நேர்காணல் அளித்தார். அந்த நேர்காணலில் தான் இந்த உணர்ச்சிமிகு தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் நடந்த ஒரு முக்கிய முடிவைப் பற்றி விரிவாக கூறினார்.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக ஒரு பாடல் தேவையாக இருந்தது. அந்த பாடலை யுவன் சங்கர் ராஜா தான் முதலில் பாடினார். அந்த நேரத்தில் யுவன் உணர்வுப்பூர்வமாக கண்ணீர் விட்டதாக இயக்குநர் கூறுகிறார்.
யுவன் குரலில் ஆன்மா
அதே பாடலை பின்னர் இளையராஜாவும் பாடியிருந்தார். ஆனால் சுசீந்திரனுக்கு யுவன் பாடிய பாடலில் உயிரும் உணர்வும் இருந்ததாகத் தெரிந்தது. அந்த உணர்வை வேறு யாராலும் சற்று கூட பெற முடியாது என்பதாலேயே யுவன் பாடிய பாடலை தேர்வு செய்ததாக கூறினார்.
இந்த முடிவை யுவனிடம் கூறிய போது, அவர் அதிர்ச்சியடைந்தார். தந்தை இளையராஜாவிடம் என்ன சொல்வது என்று பதற்றத்தில் இருந்தார். அதற்குப் பதிலளித்த சுசீந்திரன், “நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன்; எனக்கு உங்கள் குரல் வேண்டும்” என்றார். இது இசை உலகில் உணர்ச்சிமிகு ஒரு நிகழ்வாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார்.