தமிழ் சினிமாவில் சமீப காலமாக பழைய பாடல்களை திரைப்படங்களில் மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. உரிமையுடன் இசையமைப்பாளர் களிடமிருந்து அனுமதி பெற்றால் பெரும்பாலும் பிரச்சனை ஏற்படுவதில்லை.
ஆனால், அனுமதி இல்லாமல் பயன்படுத்தும் போது, உரிமை மீறல் காரணமாக சர்ச்சைகள் எழுகின்றன. சில இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதை பெருமையாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் இளையராஜா போல் உரிமையை கேட்பவர்கள் மீது, “இவர் மட்டும் காசுக்காக கேட்கிறார்” என விமர்சனங்கள் எழுகின்றன.
வைரமுத்து ஆதங்கம்
இளையராஜா போலவே, தன்னுடைய பல்லவிகள் அனுமதி இல்லாமல் திரைப்பட தலைப்புகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன என வைரமுத்து வேதனையுடன் கூறுகிறார்.
பல்வேறு தமிழ்த் திரைப்பட தலைப்புகளில், தனது பாடல் பல்லவிகளை அனுமதியின்றியும் மரியாதையின்றியும் பயன்படுத்தியுள்ளதாக வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். யாரும் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை என்பதே அவரது வருத்தம்.
“பொன்மாலைப் பொழுது”, “கண் சிவந்தால் மண் சிவக்கும்”, “மெளன ராகம்”, “விண்ணைத் தாண்டி வருவாயா”, “நீ தானே என் பொன் வசந்தம்” இன்னும் பல பல்லவிகள் திரைப்பட தலைப்புகளாக மாற்றப்பட்டாலும், உரிமை கேட்டவர்களே இல்லை என்றார்.
சொல்லாமல் எடுத்துக் கொண்டதாகக் கூறியும், அதை எடுத்தவர்கள் மீது நான் எப்போது கடிந்து கொண்டதுமில்லை; சந்தித்த இடங்களில் இதை எடுத்துக்கூறியதுமில்லை.
ஏன் என்னைக் கேட்கவில்லை என்று நான் கேட்பது நாகரிகம் ஆகாது. ஆனால், ஒரு வார்த்தை கேட்டே செய்திருந்தால் அவர்களுக்குத் தான் நாகரிகம் அல்லவா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.