கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநராக வலம் வந்தவர். ஹிட் படங்களால் ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்தார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என தொடர் வெற்றிகள் கொடுத்தார்.
சூர்யா, சிம்பு உள்ளிட்ட நடிகர்களை ஸ்டைலிஷ் அவதாரத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அவரது படங்களில் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அனைத்தும் தனித்துவமாக இருக்கும்.
இயக்கத்தை விட்டு விலகியபோது, டிடி நெக்ஸ்ட் லெவல், டிராகன் போன்ற படங்களில் நடித்தும் கவனம் பெற்றார். ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மூலம் மீண்டும் இயக்கத்தில் மின்னினார். இதில் வெந்து தணிந்தது காடு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
கௌதம் மேனன் கமலின் தீவிர ரசிகரும் கூட. லோகேஷ் கனகராஜுக்கு முன்பே கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை எடுத்தார். கமலை ஒரு புதிய ஃப்ளேவரில் காட்டி மெகா ஹிட் கொடுத்தார்.
சேர்கூட இல்லை புலம்பிய கமல்
2006ஆம் ஆண்டு ‘வேட்டையாடு விளையாடு’ படக்குழு 48 நாட்களுக்கு அமெரிக்கா சென்று ஷூட்டிங் நடத்தியது. “மஞ்சள் வெயில் மாலையிலே” பாடலுக்காக கௌதம் மேனன், கமலை பல மணி நேரம் நடக்கவிட்டுக் கொண்டே இருந்தாராம்.
குழப்பமடைந்த கமல் தயாரிப்பாளரிடம், “பணமும் வீணா போகுது. என்னை நடக்க விட்டுட்டே இருக்காங்க. எனக்கு சேர்கூட போட மாட்டேன் என்கிறாங்க!” என வருத்தம் தெரிவித்துள்ளார். அதற்கு மாணிக்கம் நாராயணன் அமைதியாக பதிலளித்து, “கௌதம் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” என்று உறுதியளித்தாராம்.
மேலும், அந்நேரத்தில் அமெரிக்காவில் படித்து கொண்டிருந்த தனது மகனை நேரடியாக ஷூட்டிங் லொகேஷனுக்கு அனுப்பி, கமலை கவனிக்கச் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய ஒரு பேட்டியில் நேரடியாக பகிர்ந்திருக்கிறார்.