Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், மதுரையில் நடத்திய பெரிய அரசியல் மாநாடு தற்போது வைரலாக பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், விஜய்யின் அரசியல் பேச்சுகள் ரசிகர்களிடையே கைதட்டலை பெற்றன.
“திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி”
விஜய் தனது உரையில், “திமுக தான் எனக்கு அரசியல் எதிரி, பாஜக தான் கொள்கை எதிரி” என்று தெளிவாக குறிப்பிட்டார். இந்த வரிகள், அவர் எந்த திசையில் தனது அரசியல் பயணத்தை நகர்த்துகிறார் என்பதை வெளிப்படுத்தின. மேலும், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் மக்களின் பேராதரவை பெற்ற எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் நினைவுகளையும் தனது உரையில் எடுத்துரைத்தார்.
முக்கிய பிரச்சினைகளில் மவுனம்?
ஆனால், சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுவது, விஜய் சில முக்கியமான பிரச்சினைகளை தனது உரையில் எதுவும் பேசவில்லை என்பதற்காக. குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்த அஜித்குமார் வழக்கு குறித்தும் அவர் மவுனமாக இருந்தார். அதேபோல், சமீபத்தில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டமும், அவர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கையும் பற்றி மாநாட்டில் ஒரு வார்த்தை கூட அவர் குறிப்பிடவில்லை.
சினிமா வசனம் மாநாட்டில், அரசியல் பேச்சு ட்விட்டரில்!
சிலர் சமூக ஊடகங்களில், “மாநாட்டில் பேச வேண்டியதை ட்விட்டரில் பேசுகிறார், சினிமாவில் பேச வேண்டிய வசனங்களை மாநாட்டில் சொல்கிறார்” என்று விமர்சிக்கிறார்கள். இதனால், “விஜய்க்கு இன்னும் அரசியல் பக்குவம் வரவில்லை” என்ற கருத்து டிரெண்டாகியுள்ளது.
ரசிகர்களின் பாராட்டு – விமர்சகர்களின் சந்தேகம்
விஜய்யின் ரசிகர்கள், “அவர் எந்த அரசியல் கட்சியையும் நேரடியாக தாக்காமல், தன்னுடைய கொள்கையை வெளிப்படுத்தியிருப்பது பெரிய விஷயம்” என்று பாராட்டுகின்றனர். ஆனால் விமர்சகர்கள், அரசியல் அரங்கில் நிலைப்பாட்டை காட்ட வேண்டிய நேரத்தில், விஜய் ரசிகர்களை கவரும் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அடுத்த கட்டம்?
விஜய் லட்சகணக்கான மக்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கான பிரச்சனையை தைரியமாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு வார்த்தை ஜாலங்களை காட்டிக் கொண்டிருந்தால் அவர் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து விடும் என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.