சென்னையில் நடைபெற்ற ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்கள் மனங்களை கவர்ந்த மிகுந்த எதிர்பார்ப்புள்ள நிகழ்வாக அமைந்தது. ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகார்ஜுனா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத். விழாவின் முக்கிய சிறப்பாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உரை பெரும் கவனம் பெற்றது.
லோகேஷ் கூலி படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பற்றி பேசினார். சௌபின் ஷாஹிர் படம் வெளியான ஒரு வாரத்திற்கு பேசப்படும் முகம் ஆக இருப்பார் என்றார். மேலும் கன்னட நடிகர் உபேந்திரா இந்த படத்துக்காக நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறார் என்று பாராட்டினார்.
நடிகர் நாகர்ஜுனாவை பார்த்துதான் நான் பங்க் வைக்க ஆரம்பித்தேன் என்றும், ரஜினி பற்றி பேச ஒரு மணி நேரம் கூட போதாது என்றார். நேரம் குறைவாக இருப்பதால் தான் சுருக்கமாக பேசுகிறேன் என்றார். என்னுடைய வாழ்க்கை மாற்றம் நிதானம் அமைதி ஆனதுக்கு ரஜினிகாந்த் சார் தான் காரணம் என்று கூறினார்.
படத்தில் வரும் “1421” என்ற எண்ணை குறித்து அவர் ஒரு தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்தார். ரஜினிகாந்த் இந்த எண்ணின் அர்த்தம் என்னவென்று கேட்டதும், அதுவே ஒரு சிறப்பான உரையாடலாக மாறியதாக தெரிவித்தார். அந்த எண் அவரது தந்தையின் கூலி எண் என்பதையும் உருக்கமாகக் கூறினார்.
அவரது தந்தை ஒரு பஸ் கண்டக்டர் என்பதையும், 1421 என்ற எண்ணை badge-ஆக பயன்படுத்துவது அவருக்கான ஒரு மரியாதை என உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். நீங்கள் ஏன் இதை முன்கூட்டியே சொல்லவில்லை என ரஜினி கேட்டபோது ஒரு நாள் நீங்கள் கேட்பீர்கள் அது மறக்க முடியாத நினைவாக இருக்கும் என நினைத்தேன் என்றும் கூறினார்.
தனது தந்தையின் எண்ணை கூலி படத்தில் பயன்படுத்தியதன் மூலம், அவருக்கு ஒரு உருக்கமான Tribute அளித்ததாக லோகேஷ் தெரிவித்தார். இயக்குநர் ஒருவரின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த இந்த உரை ரசிகர்கள் மனங்களில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது.