தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சூர்யா. ஒரு காலத்தில் வித்தியாசமான கதைகள், வலுவான கதாபாத்திரங்கள் மூலம் தனக்கே உரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ஆனால் கடந்த சில வருடங்களில் அவருடைய படங்கள் வரவேற்பு பெறாத நிலை உருவாகியுள்ளது.
விமர்சகர்களும் ரசிகர்களும் சூர்யாவின் மாற்றத்தை உணர்ந்துள்ளனர். தன்னை விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் ஒப்பிட்டு, தன் சுயதன்மையை பறிகொடுத்தார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் சரியான கதைகளை தேர்வு செய்யும் திறன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கதை தேர்வா? இல்ல வேற காரணமா?
சூர்யா, முன்னணி நடிகர்களைப் போல தனக்கான சுற்றத்தை குறைத்துக்கொண்டார். நல்ல நண்பர்கள், உண்மையான விமர்சனங்களை சொல்லும் வாய்ப்பையும் இழந்தார். இது அவரது படத் தேர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஜெய் பீம் படம் ஒரு முக்கிய சாதனை என்றாலும், அதன் பின்னணி அவருக்கு சில சமூக பிரச்சனைகளை உருவாக்கியது. குறிப்பாக வன்னியர் சமூகத்தின் எதிர்ப்பும், பாஜக ஆதரவாளர்களின் தாக்குதலும் தொடர்ந்து இருந்தன. இது அவரது பிரபலத்தையும் ரசிகர் மத்தியில் பாதித்தது.
இந்நிலையில், கங்குவா போன்ற முற்றிலும் மாறுபட்ட படங்களில் நடிப்பது, சூர்யாவுக்கு குழப்பமும் எதிர்மறையான விமர்சனங்களையும் உருவாக்கியது. சமூக விமர்சனங்களும் தவறான கதைத்தேர்வுகளும் சேர்ந்து அவரது வளர்ச்சியை தடுப்பதாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், சமீபத்தில் தேர்வு செய்த கருப்பு படமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஆரம்பத்தில் மூக்குத்தி அம்மன் 2 க்காக எழுதப்பட்ட கதை எனும் தகவலுடன், பெண்தெய்வ கதையை ஆண்தெய்வமாக மாற்றியதால் சுயதன்மை குறைபாடு என விமர்சிக்கப்படுகிறது. இதெல்லாம் தான் சூர்யா சினிமாவில் சரிவதற்கான காரணம் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு திறமை குறைவில்லை. ஆனால் மீண்டும் முன்னணிக்கு வர விரும்புகிறார் என்றால், சரியான கதைகள், நேர்மையான சுற்றம், தெளிவான பாதை என்பவை அவசியம். தன் அடையாளத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் துணிச்சலால் மட்டுமே அந்த உயரத்தை மீண்டும் பெற முடியும்.