Manivannan : மணிவண்ணன் என்ற பெயர் கேட்டவுடன் நினைவுக்கு வருவது – அவர் பாரபட்சமில்லாமல் குத்தி பேசும் அரசியல் வசனங்கள், கொங்கு தமிழில் ஒலிக்கும் நையாண்டி குரல். அரசியல், காதல், த்ரில்லர் என அனைத்தும் கையாளும் ஓர் யதார்த்த இயக்குநர்.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தால் ஈர்க்கப்பட்டு, இயக்குநர் பாரதிராஜாவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் ரசிகர் கடிதம் எழுதியவர். பாரதிராஜாவின் உதவியோடு ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ ஆகிய படங்களில் கதை எழுதி பயணத்தை தொடங்கினார்
முதலாவது படமான நிழல்கள் தோல்வியடைந்தாலும், பாரதிராஜா மீண்டும் வாய்ப்பு கொடுத்து எடுக்க வைத்தார் அலைகள் ஓய்வதில்லை. அந்த படம் 175 நாட்களாக ஓடி மாபெரும் வெற்றி பெற்று, மணிவண்ணனின் திறமையை நிரூபித்தது. இளையராஜா இவரை இயக்குநராக மாற்ற துணைநின்ற மற்றொரு முக்கியமான காரணியாக திகழ்கிறார்.
ஜானர் எல்லாம் மீறிய இயக்குநர்
மணிவண்ணன் ஒரே வகை படங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாதவர். அவர் இயக்கிய திரைப்படங்கள் – காதல் (இங்கேயும் ஒரு கங்கை), ஆக்ஷன் (ஜல்லிக்கட்டு), செண்டிமெண்ட் (வாழ்க்கைச் சக்கரம்), திரில்லர் (நூறாவது நாள்), சமூக அரசியல் (பாலைவன ரோஜாக்கள், ஆண்டான் அடிமை) போன்ற பலதரப்பட்டவை.
மணிவண்ணனும் சத்யராஜும் கோவை அரசு கலைக் கல்லூரியில் நண்பர்கள். 25 படங்களில் சத்யராஜை ஹீரோவாக வைத்து இயக்கியவர். இதில் 12 படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டாயின. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வசனம் எழுதும் இவரது ஸ்டைல், பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 400-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். அவ்வை சண்முகி, காதல் கோட்டை, சூர்யவம்சம் உள்ளிட்ட பல படங்களில் மெமரபிள் supporting ரோல்களில் சிறப்பாக நடித்துள்ளார்.
50-வது படமான நாகராஜசோழன் MA MLA வெளியான பின், உடல்நலக் குறைவால் 2013ல் அவர் மறைந்தாலும், அவர் விதைத்த சிந்தனைகள் தமிழ்த் திரையுலகில் என்றும் வாழும்.