Pa.Ranjith: சில தினங்களுக்கு முன்பு ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் படப்பிடிப்பின் போது உயிரிழந்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் நடித்து வரும் வேட்டுவம் படப்பிடிப்பில் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது.
ஏற்கனவே திரையுலகில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதை அடுத்து பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பில் அதை பின்பற்றுகிறார்களா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.
அப்படித்தான் இந்த விஷயத்திலும் நடந்திருக்கிறது. விதிமுறையின் படி இது போன்ற ரிஸ்க்கான சண்டை காட்சிகள் எடுக்கப்படும் போது ஆம்புலன்ஸ், டாக்டர், நர்ஸ் உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பக்காவாக இருக்க வேண்டும்.
வேட்டுவம் படப்பிடிப்பில் கூட ஆம்புலன்ஸ் இருந்திருக்கிறது. ஆனால் விதிமுறைகளின் படி இல்லை. அதேபோல் அந்த கார் கூட பழைய மாடல். அப்படி இருக்கும்போது அதில் ஒரு உயிரை காக்க தேவையான பாதுகாப்பு முறைகளும் கிடையாது.
பாதுகாப்பு எல்லாம் வெறும் கண்துடைப்பு
எதிர்பாராத விதமாக கார் தடம் புரண்ட நிலையில் பலத்த காயம் ஏற்பட்டு தான் மோகன்ராஜ் உயிரிழந்துள்ளார். உண்மையில் இப்படி ஒரு காட்சியை படமாக்கும் முன் திட்டமிடல் அவசியம். அது இல்லாதது தான் ஒரு உயிர் போக காரணமாகிவிட்டது.
இப்போது பல கோடி கொட்டிக் கொடுத்தாலும் போன உயிர் திரும்பி வரப்போவதில்லை. இதற்கு ரஞ்சித் தான் முழுக்க காரணம். அதே போல் இந்த அசம்பாவிதத்தில் டெக்னாலஜி மீது எந்த குறையும் சொல்ல முடியாது மனிதர்களின் தவறுதான்.
இது தொடர்பாக ரஞ்சித் தரப்பில் விளக்கமும் வருத்தமும் தெரிவித்து இருந்தாலும் நடந்த சம்பவத்திற்கு அவர்தான் பொறுப்பு. தற்போது அவர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.