Ronth Movie Review: க்ரைம் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு உண்டு. அதிலும் இது போன்ற படங்கள் மலையாள திரையுலகில் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது.
அப்படி கடந்த மாதம் வெளிவந்து வரவேற்பை பெற்ற ரோந்த் தற்போது ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. ஷாஹி கபீர் இயக்கத்தில் திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ நடிப்பில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.
படத்தின் தலைப்பை பார்த்ததுமே புரிந்து இருக்கும் எந்த மாதிரியான கதை என்று ஒரு இரவு நேரத்தில் இரண்டு போலிஸ் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்களை சுற்றி நடக்கும் சிறு சிறு விஷயங்கள் அவர்களுக்கே பாதிப்பாக அமைகிறது.
ரோந்த் விமர்சனம்
அந்த சம்பவத்தால் அவர்களுக்கு என்ன நடந்தது? எப்படி அதை சமாளித்தார்கள்? என்பது தான் படத்தின் ஒன்லைன். பொதுவாக போலீஸ் ரொம்பவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் அல்லது தவறு செய்பவர்களாக இருப்பார்கள் என்பது பலருடைய கருத்து.
ஆனால் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர்கள் பற்றியும் போலீசுக்கும் ஒரு குடும்பம் இருக்கு என்பது பற்றியும் அவர்கள் நல்லவர்களாக கெட்டவர்களா என்று கூறும் கதை தான் இப்படம்.
திரைக்கதையை பொருத்தவரையில் கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் ஒவ்வொரு காட்சியும் படத்தோடு ஒன்றிப்போக வைத்து விடுகிறது. அதேபோல் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வையும் கொடுக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக விஷூவல் காட்சிகள் அனைத்துமே மிரட்டலாக இருக்கிறது. திரில்லர் படம் என்பதை தாண்டி ஹாரர் ரேஞ்சுக்கு சில காட்சிகளை காட்டி இருக்கின்றனர்.
இவை அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் யாரும் யோசிக்காத வகையில் இருக்கிறது. ஆக மொத்தம் வார இறுதியில் ஓடிடியில் பார்க்கக்கூடிய தரமான படம் தான் இந்த ரோந்த்.