Velu Prabhakaran: வேலு பிரபாகரன் தன்னுடைய 65 ஆவது வயதில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளுடன் இருந்தவர் வேலு பிரபாகரன்.
தன்னுடைய அறிமுக படத்திலேயே வித்தியாசமான கதை களத்தை இயக்கி வெற்றி கண்டவர். தமிழ் சினிமாவில் 1980 களிலேயே சயின்ஸ் பிக்சன் கதைகளை இயக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
மறைந்தார் வேலு பிரபாகரன்
ஆராய்ச்சியாளர் ஒருவர் இறந்த கொலைகாரன் ஒருவனின் உடலில் தான் கண்டுபிடித்த மருந்தை செலுத்துகிறார். இதனால் அவன் சாகா வரம் பெற்று எழுந்து மிருகமாய் மாறுகிறான்.
அதன் பின்னர் அந்த ஆராய்ச்சியாளரிலிருந்து தொடங்கி நடக்கும் கொலைகளை மையமாகக் கொண்டு வெளியானது நாளைய மனிதன். படத்தின் முடிவில் தொடரும் என முடித்து இரண்டு வருடங்கள் கழித்து அதிசய மனிதன் என அதே கதைக்களத்தை கையில் எடுத்து மீண்டும் வெற்றி பெற்றார்.
இருந்தாலும் வேலு பிரபாகரனுக்கு பெரும்பாலும் இதன் பின்னர் தொடர்ந்து தோல்வி படங்கள் தான் இருந்தன. இதனால் தயாரிப்பாளர் என்ற அவதாரத்தையும் எடுத்தார். 1984 இல் இருந்தே தமிழ் சினிமாவில் இருப்பதால் சினிமா வட்டாரங்களில் நடந்த பல விஷயங்களை கடந்த சில வருடங்களாக தன்னுடைய பேட்டிகளிலும் பகிர ஆரம்பித்தார்.
தன்னுடைய 60 ஆவது வயதில் ஒரு இயக்குனரின் டைரி என்ற படத்தை இயக்கி நடித்தார். அதன் பின்னர் அந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்த பெண்ணை அவரைவிட 25 வயது குறைவாக இருந்த போதிலும் திருமணம் செய்து மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பினார்.