Rajini: எண்பதுகளில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவை முடி சூடா மன்னனாக ஆண்டு வருகிறார் ரஜினி. குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகர்கள் அத்தனை பேரும் பெரும்பாலும் ரஜினி ரசிகர்களாகத்தான் வந்தார்கள்.
தாங்கள் ஏறும் மேடைகளில் தங்களை ரஜினி ரசிகராக அடையாளப்படுத்தி தான் மக்களிடம் சென்று சேர்ந்தார்கள். அப்படி தன்னை ஒரு ரஜினி ரசிகர் என்றும், ரஜினிக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று நடிகர் சரவணன் சொல்லி இருக்கிறார்.
கலகலப்பான நினைவலைகள்
90களின் காலகட்டத்தில் ஹீரோவாக கலக்கிய சரவணன் பருத்திவீரன் படத்தின் மூலம் சித்தப்புவாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3 இவரை மீண்டும் மக்களிடையே அடையாளப்படுத்தியது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி இவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சரவணன் தன்னுடைய நினைவலைகளில் இருந்து ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். துடிக்கும் கரங்கள் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு சண்டைக் காட்சிகள் ரஜினி மற்றும் ஜெய்சங்கர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஜெய்சங்கர் ரஜினியை அடிப்பது போன்று ஒரு காட்சி. அதற்கு ஜெய்சங்கர் ரசிகர்கள் சிலர் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள். இதனால் கோபம் வந்த சரவணன் அந்த கூட்டத்தில் ஒருவரை போட்டு பயங்கரமாக அடித்திருக்கிறார். ரஜினி மீது தனக்கு அவ்வளவு பற்று என்றும் ரஜினிக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் சொல்லி இருக்கிறார்.