கூலி படம் லோகேஷ் கனகராஜுக்கு சறுக்கலாக அமைந்ததா என்பதுதான் இப்பொழுது எல்லோருடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் . ரஜினி போல் ஒரு உச்ச நட்சத்திரம் கால் சீட் கிடைத்தும் அதை வீணடித்து விட்டாரா? சன் பிக்சர்ஸ் கொடுத்த அழுத்தமா அல்லது அவசரப்பட்டு படத்தை முடித்தாரா என்பது தெரியவில்லை.
படையப்பா, சந்திரமுகி இதுவெல்லாம் எப்பேர்ப்பட்ட படங்கள். இது போன்று ஒரு படம் இப்பொழுது எடுக்க முடியவில்லையா அல்லது அதை பழைய ட்ரெண்ட் என நிராகரித்து விடுகிறார்களா என தெரியவில்லை. கூலி படம் வெற்றியா தோல்வியா என்பது இருக்கட்டும் ஆனால் அடுத்தடுத்து லோகேஷ் படிக்கட்டுகள் உயருமா என்பதுதான் கேள்விக்குறி.
கைதி 2 படத்திற்கு 70 கோடிகள் சம்பளம் கேட்கிறார் லோகேஷ். கூலி நல்ல வசூல் அடைந்து, ஒரு தரமான பெயரை வாங்கிக் கொடுத்தால் இந்த சம்பளத்தை தயாரிப்பாளர்கள் வாரி வழங்குவார்கள். ஆனால் கூலி படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்து கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் ரஜினி அளவிற்கு சமமான சம்பளத்தை வாங்கினார் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ்கிரன். இந்த வெற்றிக்கு காரணம் அவர் படம் முடிந்த பிறகு, கடை கோடி ஊழியரிலிருந்து, டாப் அசிஸ்டன்ட் இயக்குனர்கள் வரை படத்தை போட்டு காண்பிப்பாராம்.
படம் முடிந்த பிறகு அவர்களுடைய நிறை குறைகளை லெட்டராக எழுதி, வெளியில் ஒரு டப்பா வைத்து அதில் போட சொல்லுவாராம். அதை அனைத்தும் எடுத்து படித்து சிலவற்றை திருத்தியும் உள்ளார். ஆனால் இப்பொழுது 24 அசிஸ்டன்ட் இயக்குனர்களுடன் பயணம் செய்யும் லோகேஷ் படத்தை தயாரிப்பாளருக்கும் போட்டு காட்டுவதில்லை, ஹீரோவிற்கும் போட்டு காட்டுவது இல்லையாம்.
இப்படி செய்வதால் படத்தில் உள்ள நிறை குறைகள் பற்றி அவருக்கு தெரிவது கஷ்டம் தான். நிறைவுகளை தெரியாவிட்டாலும் குறைகளை தெரிந்து களை எடுக்க வேண்டும். இப்படி செய்யாமல் படத்தில் இருக்கும் ஓட்டைகளை எப்படி அடைக்க முடியும். சமீபத்தில் மணிரத்தினம் கூட தக்லைப் படத்தை கமல் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு போட்டுக் காட்டாமல் சிதைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.