Vijayakanth : தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனித்துவமான இடத்தை பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருடைய எளிமையும், தன்னம்பிக்கையும், நெகிழ்ச்சி தரும் சம்பவங்களும் ரசிகர்களிடையே இன்னும் பேசப்படும் கதைகளாக இருந்து வருகின்றன. அதில் ஒன்றுதான், அவர் பெற்ற MGR பிரச்சார கார் பற்றிய வரலாறு.
MGR மேல் கேப்டன் கொண்ட பாசம்..
சினிமா உலகத்திலும், அரசியல் களத்திலும் தன்னுடைய சாதனைகளால் அனைவரையும் கவர்ந்த விஜயகாந்த், ஒவ்வொரு பிறந்தநாளிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் மனைவி ஜானகி அம்மையாரை நேரில் சென்று வாழ்த்துக்களை பெற்றுக் கொள்வார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்த அளவுக்கு, கேப்டனின் மனதில் எம்.ஜி.ஆர்.க்கு இருந்த மரியாதையும் பாசமும் பெரிது.
பளிச்சென்று கேட்ட பரிசு..
ஒரு வருடம், வழக்கம் போல பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ள சென்ற விஜயகாந்திடம் ஜானகி அம்மையார் சிரித்தபடி, “எம்.ஜி.ஆர். நினைவாக உனக்கு என்ன பரிசு வேண்டுமோ சொல்லு!”என்று கேட்டாராம். அந்த கேள்விக்குப் பளிச்சென பதில் சொன்னார் விஜயகாந்த்: “எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய காரை பரிசாக வேண்டும்!”
அந்த நேரத்தில் அனைவரும் ஆச்சரியப்பட்டாலும், ஜானகி அம்மையார் மகிழ்ச்சியுடன் அந்த காரை விஜயகாந்துக்கு பரிசாக அளித்தார். அந்த கார், எம்.ஜி.ஆர். தலைமையின் அடையாளமாக இருந்த ஒரு முக்கிய நினைவுச்சின்னம்.
பொக்கிஷமாக பாதுகாத்த விஜயகாந்த்..
இன்றுவரை அந்த மதிப்புமிக்க கார், கேப்டன் விஜயகாந்தின் இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் முன்னேறி, தனது தனித்துவத்தை நிரூபித்த கேப்டனுக்கு, அந்த கார் ஒரு பெருமையான நினைவுச் சின்னமாக இருந்து வருகிறது.
விஜயகாந்தின் இந்த மரியாதையும் பாசமும் அவரின் ரசிகர்களை பெரிதும் கவர்கிறது. “கேப்டன்” என்ற பட்டம் அவர் நடிப்பிற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். மீதான அவரது மரியாதைக்கும் கிடைத்த பட்டம் என ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர். இன்றும் அந்த கார் கேப்டன் ஆலயத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.