தனது வெற்றிகரமான படைப்புகளால் ரசிகர்களை ஈர்த்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து ‘கூலி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா பிரபலங்கள் நடிக்கும் இப்படம், ரஜினியின் மாஸ் வசூல் படமாக உருவாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அதே நேரத்தில் ‘பராசக்தி’ எனும் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா உருவாக்கி வருகிறார். 1965ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ள படம் இது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, ராணா டகுபதி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். காரைக்குடி, இலங்கை மற்றும் பொள்ளாச்சியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க சுதா கொங்கரா மேடம் உடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சிவகார்த்திகேயன் கூட தம்பி வா நீ நடித்தால் படம் நல்ல இருக்கும் என்று சொன்னதாகவும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் கதையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, ஆனால் கூலி டைம்லைன் காரணமாக, அந்த படத்தில் என்னால் வில்லன் கேரக்டரில் நடிக்க முடியவில்லை என்பதை லோகேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். லோகேஷ் நடிக்க முடியாத அந்த வில்லன் கதாபாத்திரத்தில் தற்போது ரவி மோகன் நடித்துள்ளார்.
பராசக்தியில் நடிக்க தவறினாலும் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் அவர் முதல் முறையாக நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராக ட்டுமின்றி நடிகராகவும் வர விருக்கும் லோகேஷ் வருகையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.